சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் 3 வீடுகள் சூறையாடி தீ வைக்கப்பட்டுள்ளதாலும் சாலை மறியல் போராட்டத்தாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமின் நிர்வாகத் தலைவராக கண்ணன் என்கிற சிவகுமார் (42) இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு முகாம் பகுதியில் சிவகுமார் நடந்து சென்றபோது அங்கு வந்த முகாம் வாசிகள் சிலருக்கும் சிவகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சிவகுமாரை எதிர் தரப்பினர் இரும்புக்கம்பி மற்றும் உருட்டு கட்டைகளால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முகாம்வாசிகள், சிவகுமாரை கொலை செய்தவர்களின் குடும்பங்கள் வசித்து வந்த 3 வீடுகளை சூறையாடி தீவைத்தனர்.
இதையடுத்து சம்பவ கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதற்கிடையே வழக்குப்பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், முகாமில் வசிக்கும் செல்வா என்ற சுவேந்திரன் அவரது அண்ணன் கண்ணா என்கிற மகேந்திரன், மகேந்திரன் மனைவி புஷ்பஜோதி, மகன் தீபக், மகள் நிஷா என்கிற அக் ஷயா, சுவேந்திரனின் மகன் ஆகாஷ் பிரசன்னா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சிவகுமாருக்கும், சுவேந்திரன் குடும்பத்துக்கும் 10 ஆண்டுக்கு முன்பிருந்தே முன்பகை இருந்துள்ளது. சமீபத்தில் முகாம் மக்களுக்கு 198 தொகுப்பு வீடுகளை தமிழக அரசு வழங்கியது. இந்த தொகுப்பு வீட்டை சுவேந்திரன் தரப்பினருக்கு கிடைக்கவிடாமல் சிவகுமார் செய்ததாக தெரிகிறது. இதன்தொடர்ச்சியாகவே வாக்குவாதமும் கொலையும் நிகழந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலையாளிகளை நாடு கடத்தக் கோரி, முகாமைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் நேற்று சென்னை –கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் எஸ்பி விவேகானந்தா சுக்லா பேச்சு நடத்தியதன் பேரில்போராட்டம் கைவிடப்பட்டது.



