யாழ் பேருந்து நிலைய கடைகளால் குவியும் வருமானம்!

0
25

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெறுவதாக இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றி (14) நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.