நடிகை சௌந்தர்யா மரணம் – 22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு

0
3

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்து சுமார் 22 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பாக மூத்த நடிகர் மோகன் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில், சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல என்றும், மோகன் பாபுவுடனான சொத்து தகராறில் ஏற்பட்ட கொலை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிட்டிமல்லு என அடையாளம் காணப்பட்ட முறைப்பாட்டாளர், சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் ஷம்ஷாபாத்தின் ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை மோகன் பாபுவுக்கு விற்க மறுத்ததாகவும், இது ஒமோதலுக்கு வழிவகுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

விபத்துக்குப் பிறகு மோகன் பாபு அந்த நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியதாகவும் இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டிமல்லு கம்மம் ஏசிபி மற்றும் மாவட்ட அதிகாரி இருவரிடமும் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் அரசாங்கம் நிலத்தை பறிமுதல் செய்து அனாதை இல்லங்கள் அல்லது இராணுவ குடும்பங்களுக்கான ஆதரவு போன்ற பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நில அபகரிப்பில் மோகன் பாபுவின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை மேலும் அதிகரிக்கும் வகையில் மஞ்சு குடும்பத்திற்குள் நடந்து வரும் மோதல்கள் குறிப்பாக மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் தொடர்பான சமீபத்திய சட்ட சிக்கல்கள் ஆகியவற்றை முறைப்பாட்டாளர் மேற்கோள் காட்டினார்.

மஞ்சு மனோஜுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஜல்பள்ளியில் உள்ள ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகையை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த சட்டப் போராட்டத்தால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கூறியுள்ள முறைப்பாட்டாளர், பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மோகன் பாபு அல்லது அவரது பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.

தென்னிந்திய படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான சௌந்தர்யா, ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு தனியார் விமான விபத்தில் அரசியல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்தபோது விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவரது சகோதரர் அமர்நாத் உயிரிழந்தார். மேலும் அந்த நேரத்தில் நடிகை கர்ப்பமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினரால் அவரது உடலை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.