இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பீகாரில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கும் ‘பகடவா விவா’ (Pakadwa Vivah) எனும் கலாசாரம் மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட நிதிஷ் குமார் எனும் இளைஞர் முழுமையாகப் போதையில் நிலைகுலைந்த நிலையில் இருப்பதையும் திருமணச் சடங்கின் போது அவரால் மாலையைக் கூடப் பிடிக்க முடியாமல் இருப்பதையும் காணொளி காட்டுகிறது. மற்றொரு நபர் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக மணமகளின் கழுத்தில் மாலையை இட வைப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள காணொளியில், “கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி நான் நூலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் என்னைக் கடத்திச் சென்றது.
அவர்கள் என்னை அடித்து போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்தனர். பின்னர் மோர்வா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று சங்கர் ராய் என்பவரின் மகளான லக்ஷ்மி குமாரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தான் உதவிக்கு அழைக்காமல் இருக்க ‘மாமனார்’ வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து சமஸ்திபூர் காவல்துறையினர் குறித்த வீட்டிற்குச் சென்று நிதிஷ் குமாரை மீட்டனர்.
தற்போது காவல்துறையினர் இந்தத் திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் நடந்ததா அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகத தெரிவிக்கப்படுகிறது.



