திருகோணமலை, மனையாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள ‘சென்டி பே’ (Sandy bay) கடற்கரையை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பாகவும் அப்பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்கு அதிகளவான படையினரை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர் அணியை பலப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு கடலரிப்புக்கு உள்ளாகும் பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இத்துறைமுகத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்து ‘நாரா’ நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாணத்தில் காணிகளை விடுவித்தல், வீதிகளைத் திறத்தல் மற்றும் பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்குதல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் எஞ்சியுள்ள தடைகளை நீக்குவது குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



