சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்

0
25

ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை. இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாவை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம் 2138 ரூபாய் தான் வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் எங்கே? ஒரு வருடம் முடிந்து விட்டது. சம்பள அதிகரிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீதிகள் இன்றும் புனரமைக்கப்படவில்லை. அபிவிருத்தி செய்யப்படவில்லை. எமது இரு வருட ஆட்சியில் பொகவந்தலாவ வீதி, நுவரெலியா டன்சன் வீதிகளையும் புனரமைத்தோம். எமது அரசாங்கத்தில் பெருந்தோட்ட வீதி அபிவிருத்திக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. வீதி மற்றும் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே பொருளதாரத்தை மேம்படுத்த முடியும்.

அமைச்சர் ஒரு தவறான பொய்யான விடயத்தை சபையில் குறிப்பிடும் போது அதனை சுட்டிக்காட்டி, திருத்துவதற்கு முற்படும் போது எமக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எமது ஒலிவாங்கி துண்டிக்கப்படுகிறது. இது தவறானதொரு செயற்பாடு. தவறுகளை சுட்டிக்காட்ட எமக்கும் இடமளியுங்கள்.

2000 பேருக்கு வீடுகள் வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டது பொய் என்று நான் குறிப்பிடுகிறேன். வீடுகள் வழங்கவில்லை. ஒரு சான்றிதழ் பத்திரமே வழங்கப்படுகிறது. அந்த பத்திரத்துக்கு எவ்வித சட்ட அந்தஸ்தும் கிடையாது.

அமைச்சராக நான் ஒரு வருட காலம் பதவி வகித்த போது 1300 இற்கும் வீடுகளை கட்டிமுடித்து அவற்றை கையளித்துள்ளேன். ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை அரசாங்கம் கட்டியது என்று நேற்று கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை.

மனிதன் குரங்கில் இருந்து பரிமானமடைந்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு உறுப்பினர் ஆளும் தரப்பில் உள்ளார். இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கத்துக்கு கைலாகு கொடுப்பதற்கு தாவுகிறார். இது சபை முறைமை இல்லை. இவ்வாறான செயற்பாடுகளை திருத்திக் கொள்ளுங்கள்.

காணி உறுதிப்பத்திரத்தையே வழங்கவுள்ளீர்கள். அதில் 237 நான் தயாரித்தது. இதில் நீங்கள் தயாரித்தது எத்தனை? 2000 சான்றிதழ்களை வழங்கி வீடு வழங்குகிறோம் என்று ஏன் பொய்யுரைக்கின்றீர்கள்? சம்பள அதிகரிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? ஒரு வருடம் கடந்து விட்டது. ஏதும் கிடைக்கவில்லை.

சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாயை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம், 2138 ரூபாய் தான் வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் எங்கே? அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் உரையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை விமர்சித்தார். குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவ்வாறாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஏன் உள்ளூராட்சி மன்றங்களை அமைத்தீர்கள். நாங்கள் கெட்டவர்கள், நீங்கள் நல்லவர்களா? கொஞ்சமாவது முதுகெலும்பு உங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.