ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மகன்; ஐநாவில் நீதி கோரும் தந்தை

0
22

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் (Vihanga Tejantha) தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது அமர்வில் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார்.

சமூகமும் மதமும் மையம் (Centre for Society and Religion – CSR) மற்றும் பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல் (Franciscans International) ஆகிய அமைப்புகளின் சார்பில் பேசிய சுரஜ் நிலங் (Suraj Nilang), தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் கண்டறிந்து, விரைவான மற்றும் சுதந்திரமான கிரிமினல் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைக்க, விரிவான பொருளாதார, சமூக மற்றும் உளவியல் மதிப்பீடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தாக்குதலில் உயிரிழந்த விஹங்க தேஜந்த, 20 வயதே ஆன இளைஞர் ஷங்ரி-லா ஹோட்டலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்று ஒரு வருடம் நெருங்கிய பின்னரும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மங்கிவிட்டதாக சுரஜ் நிலங் ஐ.நா. சபையில் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணைகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலுக்கு முன்னரே கிடைத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தேவாலயங்கள் மற்றும் ஷங்ரி-லா ஹோட்டலில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், வழிபாட்டாளர்களும் விருந்தினர்களும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சமூகமும் மதமும் மையம் (CSR), இந்த விசாரணைகள் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றும், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்றும், சரியான மதிப்பீடுகள் மற்றும் இழப்பீடுகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தின.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையின் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.