ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளான இடம் கண்டுபிடிப்பு! (UPDATE)

0
124

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளான இடத்தினை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் Red Crescent இன் தலைவர் Pirhossein Kolivand கருத்து தெரிவிக்கையில்,

”அங்குள்ள நிலைமை நல்லதாக இல்லை.

மீட்புக்குழுவினர் உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளான இடத்தை சில நிமிடங்களில் அடைவார்கள்.

அவசர தரையிறக்கம் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தியின் சிதைவு என கருதப்படும் பாகங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தமது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் விபத்து இடம்பெற்ற இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி நேற்றையதினம் (19) விபத்திற்குள்ளாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக ஈரானின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதனால் தேடுதல் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அஜர்பைஜான் எல்லைப் பகுதியிலிருந்து ஈரான் ஜனாதிபதி, வடகிழக்கு நகரமான தப்ரிஸிற்குச் செசென்று மீண்டும் ஈரானுக்குத் திரும்பிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.