ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் “கானல் நீதி” எனும் தலைப்பிலான உரையாடல் நேற்று (06) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னுடைய பங்கிற்கு இன அழிப்பினை சர்வதேசத்திற்கு வாக்கு மூலம் அளித்தேன். ஐ.நா மனித உரிமை பேரவையில் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை வழங்கும் பொறிமுறை அல்ல என நான் கூறினேன்.
இறுதிக்காலத்தில் 4 இலட்சம் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். எனினும் போர் முடிவுற்ற பிறகு 3 இலட்சம் மக்கள் வெளியே வந்தார்கள். இதிலிருந்து குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

நான் வழங்கிய சாட்சியங்களில் விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் மற்றும் பத்மநாதன் ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். போரை நிறுத்துமாறு அரசாங்கத்துடன் பேசி பொறிமுறையை உருவாக்கித் தருமாறு கூறினர்.
நான், பசில் ராஜபக்சவும், மகிந்தவும், அருட்தந்தையர்கள் சிலரும் இணைந்து மக்களை பாதுகாக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. மே 16இது இடம்பெற்றது. வேறு தரப்பு பக்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு இலட்சத்திற்கும் ஒன்றரை இலட்சத்திற்கும் இடைப்பட்ட மக்களை மீட்க இந்த முயற்சி எட்டப்பட்டது.
ஆனால் கடைசி கட்டத்தில் ஆட்லொறிகள் மூலம் குறித்த பகுதிக்குள் தாக்குதலை மேற்கொண்டு மக்களை அழித்தனர். இதன்போது குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதனை மே16 ஆம் திகதி புலிகள் நேரடியாக கூறினர்.
மே மாதம் 17ஆம் திகதி இந்த இன அழிப்பு தொடர்பாக சம்பந்தன் மூன்று தூதர்களுக்கு கூறுமாறு கூறினார். நான் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய தூதரகங்களுக்கு கூறினேன். இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை“ என மேலும் தெரிவித்தார்.