இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்

0
77

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சியா என்பவருக்கும் போபாலைச் சேர்ந்த சமீர் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமானவரான சமீர் தனது திருமண விபரங்களை மறைத்து சியாவுடன் பழகி வந்துள்ளார். இதனை நம்பிய சியா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி சமீருடன் வாழ்வதற்காக போபாலுக்கு வந்துள்ளார்.

சமீருக்கு ஏற்கனவே திருமணாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த பின்னர் சியாவிற்கும் சமீரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்யுமாறு அல்லது 5 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு சியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த திங்கட்கிழமை சமீர் சியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்த பின்னர் தடயங்களை அழிப்பதற்காக தனது சகோதரன், தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன் சியாவின் உடலை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்த கழிவுநீர் தொட்டியில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கழிவுநீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். அங்கு இரும்புப் பெட்டி ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு அறிவித்தனர்.

குறித்த பெண்ணின் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டாலும் சியாவின் கையிலிருந்த Tattoo வால் சடலம் அடையாளம் காணப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள காதலன் சமீரைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதுடன் கொலையினை மறைக்க உதவிய அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.