அரை ட்ரில்லியன் டொலர் சொத்துக்களை சம்பாதித்த உலகின் முதல் நபராக மஸ்க் சாதனை

0
27

உலகில் அரை ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்த முதல் நபராக டெஸ்லா நிறுவன தலைவர் எலோன் மஸ்க் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

உலகில் முதல் முறையாக சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனிப்பட்ட செல்வத்தை சேர்த்து சாதனை படைத்துள்ளார். Forbes வெளியிட்ட பில்லியனர்கள் குறியீட்டின் படி, புதன்கிழமை மாலை நியூயார்க் நேரம் 4.15 மணிக்கு மஸ்கின் செல்வம் $500.1 பில்லியனாக உயர்ந்தது.

இதில் பெரும்பகுதி அவரது டெஸ்லா பங்குகளில் 12.4% பங்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் டெஸ்லா பங்கு விலை 14% க்கும் மேலாக உயர்ந்துள்ளது.

புதன்கிழமையிலேயே 3.3% உயர்வு பதிவாகி, மஸ்கின் செல்வத்தில் கூடுதலாக $6 பில்லியன் சேர்த்துள்ளது. ஆரம்பத்தில் பங்கு விலையில் சவால்கள் இருந்தபோதிலும் அண்மையில் மஸ்க் தனது நிறுவனங்களில் மீண்டும் முழு கவனம் செலுத்துவதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

டெஸ்லா குழுமத் தலைவர் ரோபின் டென்போம் கடந்த மாதம் மஸ்க் மீண்டும் முன்னணியில் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், மஸ்க் தனது நிறுவனத்திற்கான நம்பிக்கையை காட்டும் வகையில் $1 பில்லியன் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை நேரடியாக வாங்கியுள்ளார். டெஸ்லா கார்கள் மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளில் விரிவடைவதற்கும் தயாராகி வருகிறது. டெஸ்லாவைத் தவிர மஸ்கின் பிற நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

அவரது xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஜூலையில் 75 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது. வருங்காலத்தில் 200 பில்லியன் டொலர் வரை மதிப்பீடு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், SpaceX நிறுவனம் சுமார் 400 பில்லியன் டொலர் மதிப்பில் பங்குகள் விற்பனை செய்யும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரான ஒரேகல் ஸ்தாபகர் லாரி எலிசன் 350.7 பில்லியன் அமெரிக்க சொத்துக்களை கொண்டுள்ளார்.