குரங்குகளுக்கு மிகச்சிறிய ‘லூப் கருத்தடை’ கருவி கண்டுபிடிப்பு: நாடளாவிய ரீதியில் விரைவில் அமுல்

0
34

பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப் கருத்தடை’ எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அண்மை காலமாக ஈடுபட்டிருந்தது.

இதனடிப்படையில், மிகவும் சிறிய அளவிலான கருத்தடை சாதனமான லூப் கருவி (IUD) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது நிபுணத்துவத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கருத்தடை சாதனமானது கருத்தரிக்கும் வாய்ப்பை குறைப்பதோடு குரங்குகளின் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு குரங்கிற்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ள சுமார் அரை மணி நேரம் மாத்திரமே செல்லும் எனவும் ஒருமுறை மாத்திரமே குட்டி ஈன்ற குரங்கொன்று இதற்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு குரங்குக்கு ஏற்ற கருத்தடை சாதனங்களை தயாரிப்பதற்காக குறைந்த பட்சம் 2000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்தடை கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசித்த போதிலும் தற்போது பெண் குரங்குகளுக்கு அதுவும் ஒரு குட்டியை ஈன்ற தாய் குரங்குகளுக்கு மாத்திரம் முதற்கட்டமாக இச்செயற்திட்டம் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.