மைத்திரியின் கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

0
51

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று வாக்குமூலம் பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தொடர்பில் தாம் அறிந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை தொடர்ந்து இவ்வாறும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு ஜனாதிபதி என்றவகையில் இவ்வாறான சூழ்நிலைகளின்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் அவருக்கு இருக்க வேண்டும் எனவும், அவர் ஒரு குழந்தை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னால் ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் இரண்டு கோடி இருப்பது இலட்சம் மக்களை ஆட்சி செய்தவர் எனவும் அப்படியானதொரு தலைவர் ஊடகங்களுக்கு முன் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது கேலிக்கூத்தானது எனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த விஜித ஹேரத்;

”உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் என்பது இந்த நாட்டின் நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்களை நேரடியாக பாதித்த ஒரு சோகமான நிகழ்வு. இலங்கை அரசியலில் ஒரு திருப்பு முனை எனவும் கூறலாம்.

இந்த தாக்குதலால் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதல் அதிகாரத்தைப் பெறுவதற்கான சதி என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு திட்டமிட்டது யார் என்பது இன்று வரை சரியாக வெளியாகவில்லை. வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள கருத்து மிகவும் சக்தி வாய்ந்தது.

இந்த நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால் மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கூற்றுக்கள் தொடர்பில் அரசாங்கம் முறையாகவும் துரிதமாகவும் விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த புனித வாரத்தின் ஆரம்பத்திலும், எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னதாகவும் இந்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.