தொடரும் வெப்பம்: நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0
73

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது நிலவும் வறட்சியான வானிலையினால் 15 நீர் விநியோக நிலையங்களின் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக 6 நீர் விநியோக நிலையங்களில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கம்பளவத்த, புசல்லாவை, கொட்டகலை, ஹட்டன், ஊருபொக்க ஆகிய பகுதிகளில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் பல்வேறு பிரதேசங்களின் தாழ்வு வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்துள்ளமை ஆகியன இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று (15.03.2024) சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பமான காலப்பகுதியில் குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மே வரையில் வெப்பத்துடன் கூடிய வானிலை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணம், வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.