சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழும் தமிழ் மக்கள்: விக்னேஸ்வரன் விசனம்

0
83

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ்ந்து வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறித்து விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புராதன நாகரீகம் தொடர்பான வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வது சமய கலாச்சார அமைச்சின் பிரதான நோக்கமென அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை விவகாரம்

வெடுக்குநாறிமலை வனப்பிரதேச பரிபாலன திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகவும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இடத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் அவர்களது சுயலாபத்துக்காக மக்களை கொண்டு தேவையற்ற செயல்பாடுகளை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமா என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழலில் தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த கோயில் ஒன்று காணப்படுமாயின், அதனைப் பாதுகாக்காமல் இந்துக் கோயிலில் வழிபடும் அடியார்களைத் துன்புறுத்துவது எந்தவிதத்தில் சட்டரீதியானது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் வெறும் தொல்பொருள் பாதுகாப்பு விடயம் மாத்திரம் அல்ல எனவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புடைய சிங்கள பௌத்த நிறுவனங்கள் மற்றும் பௌத்த பிக்குகள் வடகிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நீண்டகாலத் தந்திரத் திட்டத்தின் வெளிப்பாடு எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகள் குறித்து உலகறியச் செய்ய தேவையான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.