கோவிட் தடுப்பூசி பக்க விளைவுகள்..! சர்வதேச தரப்பில் விசேட ஆராய்வு

0
106

ஃபைசர் (Pzifer), மொடர்னா (moderna), அஸ்ட்ரா செனெகா ( AstraZeneca) போன்ற கொரோனா தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் தொடர்பில் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பு (Global Vaccine Data Network)எனப்படும் அமைப்பின் ஆய்வு மூலம் இந்த தடுப்பூசிகளுடன் தொடர்புடைய 13 வெவ்வேறு மருத்துவ நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய எட்டு நாடுகளில் கிட்டத்தட்ட 100 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டவர்களை மையப்படுத்தி குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பக்கவிளைவுகள் 

இதன்படி தடுப்பூசியைத் தொடர்ந்து நரம்பியல், இரத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் சிறிது அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

குறிப்பாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு இதய தசையின் அழற்சியான மயோர்கோர்டிஸ் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வைரஸ்-வெக்டார் தடுப்பூசிகள் மூளையில் இரத்த உறைவு மற்றும் நரம்பியல் கோளாறான குய்லின்-பார் சிண்ட்ரோம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் குறித்த உறுதிப்பாடு

முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம், வைரஸ்-வெக்டார் மற்றும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளுக்கு பின்னர் ஏற்பட்ட அபாயங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நு.வை.யு லாங்கோன் (NYU Langone)மருத்துவ மையத்தின் மருத்துவப் பேராசிரியரான மார்க் சீகல், தடுப்பூசிகளின் பின்னர் அடையாளம் காணப்பட்ட அரிய பக்கவிளைவுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் நன்மைகளையும் குறித்து அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை தடுப்பூசி மூலம் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளன என பயோ டெக்னாலஜி (biotechnology) நிறுவனமான சென்டிவைக்ஸ் (Centivaix) இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்கப் க்லான்வைலே (Jacob Glanville) போன்ற வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.