யாழ் – தமிழகம்; மீனவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எதிர்ப்பு நடவடிக்கை: தற்கொலை செய்வேன் என தமிழக மீனவரின் மனைவி எச்சரிக்கை

0
145

இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் தொடர் நடை பயணம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்களில் 20 பேரை விடுதலை செய்ததுடன், இரு மீன்பிடி விசைப்படகின் ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ராபர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மூன்று நாட்கள் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர் நடைப்பயணம் ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“தனது கணவரை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யாது விட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன்,என் கணவன் இன்றி எனக்கு வாழ்க்கையே இல்லை” என சிறையிலுள்ள மீனவர் ஒருவரின் மனைவி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் மீனவர்கள் கோஷங்களை எழுப்பியபடியே நடை பயணத்தை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட இலங்கை மீனவர்கள்

வடக்கு-கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ் நகரில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்தியத் துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட நிலையில்,பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்னர்.

போராட்டகார்ர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்துமீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்த மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில், போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸார் வாக்குவிதத்தில் ஈடுபட்டனர்.