உலக சாதனைப் படைக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல்; எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் – கம்மன்பில

0
145

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 3 சதவீதமான வாக்குகளையே பெற்றுக் கொண்டது. ஆனால் அடுத்தப் பொதுத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளை பெற உள்ளதாக அக்கட்சிக் கூறுகிறது. தேர்தல் ஒன்றை எதிர்பார்த்தே மக்களும் காத்திருப்பதாக பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க 3 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது. 100 இலட்சத்தில் 3 லட்சம் என்பது 3 சதவீதமாகும். ஆனால் அடுத்த தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளைப் பெற போவதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிகழ்ச்சி நிரலால் மக்கள் அரசாங்கத்தை வெறுக்கிறார்கள். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தேர்தல் ஒன்றை எதிர்பார்த்தே மக்களும் காத்திருக்கின்றனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையை படைப்பார். இது இலங்கையின் சாதனையாக மட்டுமல்ல உலக சாதனையாகவும் மாறலாம்.” என்றார்.

ஆளுங்கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை களமிறக்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவரை களமிறக்க வேண்டுமெனவும் கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.