அலுவலக பணியாளரை செருப்பு தூக்க வைத்த நிர்வாக அதிகாரி; தலைவிரித்தாடும் அதிகார துஷ்பிரயோகம்!

0
153

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலகப் பணியாளரை நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செருப்பு தூக்கவைத்த சம்பவம் நடைபெற்று இரு மாதங்கள் கழிந்த நிலையில். புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்க வந்த அலுவலக உதவியாளரை சாரி ஏன் கட்டிவந்த என்று கேட்டு அவமானப் படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் அலுவலக பணியாளராக கடமையாற்றும் இளைஞர் ஒருவரை அங்குள்ள நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தனது செருப்பை தூக்கி வரச் சொல்லி அதனை அந்த இளைஞன் தூக்கிச் சென்று கொடுத்த காட்சிகள் அங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் (17/01/2024) புதிதாக கடமையேற்க வந்த பெண் அலுவலக உதவியாளரை சாரி கட்டி வரக்கூடாது என கூறி மிக மோசமாக ஏசியதால் குறித்த அலுவலக உதவியாளரான பெண், அழுது பணி செய்ய முடியாது என கூறிய சம்பவம் பெரிய பிரச்சியையாக மாறியுள்ளது.

அலுவலக பணியாளரை செருப்பு தூக்கவைத்த நிர்வாக அதிகாரி; தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம்! | Administrative Officer Made Worker Lift His Shoes

தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது அதிகார துஸ்பிரயோகம் செய்வதோடு அலுவலக உதவியாளர்களை அவமானப் படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச பணியாளர்கள் அடிமைகளாக  நடத்தப்படும் அவலம்  

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு புதிதாக இடமாற்றம் பெற்றுச் சென்ற நிர்வாக உத்தியோகத்தர்(AO) அங்குள்ள அரச அலுவலகர்கள் மீது மிக மோசமான அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அண்மையில் அலுவலக பணியாளர் ஒருவரை தனது செருப்பை தூக்க வைத்த சம்பவம் அங்கு பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் மிகப் பெரும் அச்சத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நிர்வாக உத்தியோகத்தர் தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலக பணியாளரை தனது செருப்பை தூக்கி வரச் சொல்வாராக இருந்தால் அவரது மனநிலை எவ்வாறான அதிகார மமதையில் இருந்திருக்க வேண்டும். தனது அடிமைகள் போல் அரச உத்தியோகத்தர் ஒருவரை நடாத்துவதற்கு இவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுகிறது?

அலுவலக பணியாளர் ஒருவரை தனது செருப்பை தூக்கி வருமாறு கூறுமளிவிற்கு குறித்த நிர்வாக உத்தியோகத்தர் செயற்படுகிறார் என்றால் அரசாங்கம் வழங்கிய அதிகாரத்தை அவர் மிக மோசமாக துஸ்பிரயோகம் செய்து வருகின்றார் என்பதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது.

அலுவலக பணியாளரை செருப்பு தூக்கவைத்த நிர்வாக அதிகாரி; தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம்! | Administrative Officer Made Worker Lift His Shoes

அதுவும் அந்த இளைஞருடன் பணியாற்றிய ஏனைய அரச உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இவ்வாறு செருப்பை தூக்கிவரச் சொல்லி அவமானப்படுத்துவது மிகப்பெரிய நிர்வாக குற்றமாகும்.

வார்த்தைக்கு வார்த்தை அரச தாபன விதிக் கோவை பற்றி பேசும் மேற்படி நிர்வாக உத்தியோகத்தருக்கு தாபன விதிக் கோவையின் எந்த பிரிவில் அலுவலக பணியாளர், நிர்வாக உத்தியோகத்தரின் செருப்பை தூக்கி வர வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்த முடியுமா என அரச உத்தியோகத்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு அரசாங்கம் மக்களுக்காக சேவை செய்வதற்கு வழங்கிய பதவியை தங்களுக்கு கீழ் உள்ள அரச பணியாளர்களை அடிமைகள் போல் நடாத்துமளவுக்கு தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை குறித்த நிர்வாக உத்தியோகத்தர் துஸ்பிரயோகம் செய்துவருகின்றார் எனவும் அரச அலுவலர்களை அடிமைகள் போல் நடாத்துவதை நிறுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

எனவே இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட அலுவலக பணியாளருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.