வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞன்; நீதிமன்றம் ‘மனித ஆட்கொலை’ என கட்டளை!

0
140

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞன் நாகராசா அலெக்ஸ் இன் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் உயிரிழந்த இளைஞன்; நீதிமன்றம் வழங்கிய கட்டளை! | Youth Dies Vattukkottai Police Torture Court Oder

இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு நேற்று (2) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் இளைஞனின் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறித்த வழக்கு விசாரணைகளில் 21 சாட்சியங்களின் அடிப்படையில் இளைஞனின் உயிரிழப்பானது மனித ஆட்கொலை என நீதவான் மரண விசாரணை கட்டளையின் போது குறிப்பிட்டார்.

இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில் இது வரையில் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணை பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் உயிரிழந்த இளைஞன்; நீதிமன்றம் வழங்கிய கட்டளை! | Youth Dies Vattukkottai Police Torture Court Oder

அதோடு சம்பவத்தில் குற்றத்தில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறும் மன்று கட்டளையிட்டது.

மேலும் வழக்கு விசாரணை ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்துமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

அதேவேளை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.