போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான சோல் பீச் ஹோட்டல் இடிப்பு!

0
152

தெஹிவளையில் அமைந்துள்ள ‘சோல் பீச்’ ஹோட்டலின் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் நேற்று (01) நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளதுடன் ஹோட்டலின் பணிப்பாளர் ஒருவர் உட்பட இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஹோட்டல் தற்போது வெளிநாட்டில் இருந்து செயல்படும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெருந்தொகையான பணம் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ‘யுக்திய’ நடவடிக்கை மூலம் தெரியவந்ததை அடுத்து, தெஹிவளை கடற்கரையோரத்தில் உள்ள ஹோட்டல்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, கொழும்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஹசந்த மாரப்பன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் டிசம்பர் 20 ஆம் திகதி இடப்பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த இடத்தில் சட்டவிரோத நிர்மாணங்கள் இடம்பெற்றுள்ளதாக அவதானித்ததையடுத்து அவற்றை அகற்றுமாறு கல்கிஸ்ஸ பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனிய உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் டிச. 23ல் அந்த இடத்தில் இசை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டது. ‘சிலந்தேவா’ என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வில் 2Forty2 இசைக்குழு மற்றும் கலைஞர்களான பதியா மற்றும் சந்துஷ் (BNS), IRAJ, பில்லி பெர்னாண்டோ, ஹனா ஷாஃபா மற்றும் ஷான் பூதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.