அதிபர் தேர்தலில் புடினை எதிர்த்துப் போட்டியிடும் பெண்ணின் வேட்புமனு நிராகரிப்பு

0
136

எதிர்வரும் 2024 மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பெண் ஊடகவியலாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 பெப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு இராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷ்யா ஆக்ரமித்தது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை பல உலக நாடுகள் முன்னெடுத்தாலும், ரஷ்ய அதிபர் புடின் அவற்றை ஏற்கவில்லை.

இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும் போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போரினால் ரஷ்யாவில் உயிரிழப்பு மட்டுமல்லாது உள்நாட்டு பொருளாதாரமும் நலிவடைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

அதிபர் தேர்தலில் புடின் இற்கு எதிராக போட்டியிடும் பெண்ணின் வேட்புமனு நிராகரிப்பு | Russia President Election

இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போருக்கு காரணமான விளாதிமிர் புடினுக்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது. போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் யெகேத்ரினா டன்ட்ஸோவா எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் புடினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் ரஷ்ய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது.

அந்நாட்டு தேர்தல் சட்டப்படி ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது. இந்த முடிவை எதிர்த்து ரஷ்ய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புடினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.