மாவீரர் நாளில் வெளியான துவாரகாவின் காணொளி போலியானது: உறுதிப்படுத்திய ஊடக இணைப்பாளர் சங்கீதன்

0
105

பிரபாகரனின் மகள் துவாரகா உயிரோடு இருந்திருந்தால் இயக்கத்தில் உள்ள மூத்த போராளிகளை தொடர்பு கொண்டு பேசி இருப்பார். எனவே அவரை பற்றி வெளியாகும் தகவல்கள் போலியானவை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்தால் அவரோடு அணிவகுப்போம் என விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் சங்கீதன் தெரிவித்தார்.

மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவது போன்ற காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளி தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் சங்கீதன் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் தேசத்தின் மகள் துவாரகா. அவரது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் பொட்டு அம்மனை பார்த்து அண்ணன் சொல்கிறார். நானோ பொட்டோ குடும்பத்தை வெளியேற்றும் முடிவுக்கு போக முடியாது என்று கூறினார். அதுவே அவரது இறுதி முடிவாகவும் இருந்தது.

அப்போது எங்களை போன்றவர்கள் எல்லாம் அங்கு இருந்தோம். நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே? என்கிற கேள்வியும் இந்த நேரத்தில் எழலாம்.

இராணுவ பிடிக்கு வெளியில் இருந்த முக்கிய தளபதிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலரும் மக்களோடு மக்களாக வெளியேறியுள்ளனர். ஆனால் மக்களோடு மக்களாக அண்ணியோ, துவாரகாவோ வர இயலாது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போதே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற விவரங்கள் முன் கூட்டியே எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக சிறப்பு தொலைபேசிகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

வெளிநாடுகளுக்கு சென்ற பின்னரே பலர் அந்த தொலைபேசிகளை கைவிட்டு உள்ளனர். இன்றைக்கும் சில தொடர்புகளுக்காக சில தொலைபேசிகள் காத்திருக்கின்றன. தொலைபேசி எண்களும் அப்படியே உள்ளன.

துவாரகா வெளியில் வந்திருந்தால் நிச்சயமாக அது போன்ற தொடர்பு மூலமாக யாரையாவது தொடர்பு கொண்டிருப்பார். இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட போராளி ஒருவர் எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காக தனது நாக்கையே கடித்து துண்டாக்கினார்.

இதுதான் போராளிகளின் வரலாறு. துவாரகா வெளியில் வந்திருந்தால் அவர் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வெளிநாட்டு கட்டமைப்பும் உறுதியாக இருந்தது. அவர்களிடமாவது துவாரகா பேசி இருப்பார்.

தேசிய தலைவர் மீண்டும் வந்துவிடக்கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் நினைப்பதாக தவறான பிம்பம் வடிவமைக்கப்படுகிறது. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தேசிய தலைவர் வந்துவிட்டால் அடுத்தகணமே அவரது பின்னால் அணிவகுத்து நிற்போம்.

2008 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை வரவில்லை. இனி தமிழர்கள் வாழும் காலம் வரை அதுதான் மாவீரர் நாள் உரையாகும்.

இனி எங்கள் இனத்துக்கான தேசிய தலைவர் என்று யாரும் இல்லை. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனி வருபவர்கள் இணைப்பாளராக இருக்கலாம்.

ஒருவேளை துவாரகா இருந்திருந்தால் இயக்கத்தில் உள்ள மூத்த போராளிகளை தொடர்பு கொண்டு பேசி இருப்பார். எனவே அவரை பற்றி வெளியாகும் தகவல்கள் போலியானவை” என தெரிவித்தார்.