தபால் திணைக்களத்தின் எந்தவொரு சொத்துக்களையும் விற்க ஜனாதிபதிக்கு கூட அனுமதி இல்லை

0
192

தபால் திணைக்களத்தின் எந்தவொரு சொத்துக்களையும் விற்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று ஹட்டன் நகரில் ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுப்பதன் மூலமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். எங்களின் ஆட்சேபனைக்கு இதுவரை அரசாங்கம் சாதகமான பதில் அளிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் தபால் திணைக்களத்தின் வளங்களையும் நாட்டின் வளங்களையும் விற்றால் அதனை தடுக்க உழைக்கும் மக்களையும் அனைத்து மத தலைவர்களையும் ஒன்று திரட்டுவோம். இவ்வாறான செயல்களால் நாடு மேலும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

நாடு திவாலாகும் போது நாட்டை மேலும் நெருக்கடிகளுக்கு ஆளாக்காமல் நாங்கள் சொல்வதைக் கேட்டு கவனமாக சிந்தித்து நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பதை நிறுத்துங்கள்.

அரசால் கடனை அடைக்க முடியாவிட்டால் நாட்டில் வீண்விரயம் ஊழலை தடுத்து வருவாயை சரியான முறையில் பெற்று கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கவும்.

அவ்வாறு இல்லையெனில் பொதுச் சொத்தை விற்று நாட்டின் கடனை அடைக்க நினைத்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: