நீதிபதி டி. சரவணராஜா அரசியல் தஞ்சத்திற்காகவே பதவி விலகினார்; சரத் வீரசேகர

0
168

மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக தமது சுயகௌரவத்தையே காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு, நிழல் தந்த தாய் நாட்டைக் காட்டிக்கொடுப்பது பெரிய விடயமாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர,

நாட்டு மக்களின் குறிப்பாக பெரும்பான்மையாக வாழ்வது சிங்கள மக்கள். அவர்களின் வரி பணத்தில் கல்வி கற்று , பல வருடங்கள் சம்பளம் பெற்று, சகல வரப்பிரதாசங்களையும் அனுபவித்துவிட்டு, சிங்கள மக்கள் தமக்கு இடையூறு விளைவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டு அரசியல் தஞ்சத்துக்காக வெளிநாடு செல்வது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

சிங்கள மக்களுக்கு வடக்கில் வாழ்வதற்கான உரிமை இல்லை. காணி வாங்கவோ அல்லது வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கும் அவ்வாறே. ஆனால் 52 வீதமான தமிழ் மக்கள் தெற்கில் சிங்கள மக்களுடன் இணைந்து சிறப்பாக வாழ்கின்றனர். எனவே, யாருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது? இதனை சுட்டிக்காட்டும் எமக்கு இனவாதி முத்திரை குத்தப்படுகின்றது.

வடக்கில் பௌத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. அங்கு தொல்லியல் சட்டத்தை அமுல்படுத்த முற்பட்டால் அச்சுறுத்தல் விடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது, வடக்கில் தனி நாடு உள்ளதா என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. பௌத்த அடையாளம் காணப்பட்ட இடங்களில் சிவலிங்கம் சிலை வைக்கப்படுகின்றது, இதுதான் மத நல்லிணக்கமா?

இவ்வாறானதொரு சூழ்நிலையில் முல்லைத்தீவு நீதிபதி அன்று வழங்கிய தீர்ப்பு நியாயமானதா என கேட்கின்றேன். அதேபோல அச்சுறுத்தல், அழுத்தம் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறியதாக முல்லைத்தீவு நீதிபதி கூறியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஐந்து வழக்குகளில் அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். இதன்காரணமாகவே நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக, சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை அவர் கோரியுள்ளார்.

நீதிபதியாக அல்ல பயனாளியாகவே அன்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அவர் வந்துள்ளார். எனவே, தீர்ப்புகளை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் நீதிபதி என்பதால் பிடியாணை பிறப்பித்திருக்க முடியும்.

நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அவர் வாகனத்தை விற்றுள்ளார். மேற்குலக தூதுவர்கள் இருவரையும் சந்தித்துள்ளார். தமக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது என அவர் கூறினாலும், அதனை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

நீதிபதியின் மனைவி நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளார். அச்சுறுத்தல் இருந்தால் அதை விடுத்தது யார் என அவர் கூற வேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரியும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. உண்மை கண்டறியப்பட்டு, அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக தமது சுயகௌரவத்தையே காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு, நிழல் தந்த தாய் நாட்டைக் காட்டிக்கொடுப்பது பெரிய விடயமாக அமையாது.” எனவும் தெரிவித்தார்.