வயிற்று வலியால் அவதிப்பட்ட நோயாளி: அடிவயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட நம்ப முடியாத பொருட்கள்!

0
150

வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் அடிவயிற்றில் நம்ப முடியாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பஞ்சாப் மாநிலம் மொகவாலாவில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியர்கள் குழுவொன்று இந்த அற்புதமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் வயிற்றில் இயர்போன்கள், கம்பி துண்டுகள், பொத்தான்கள், முடி கிளிப்புகள் மற்றும் ராக்கி போன்றவை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

35 வயதான குல்தீப் சிங், இரண்டு நாட்களுக்கும் மேலாக குமட்டல் மற்றும் வயிற்று வலியால் அவதியுற்றுள்ளார். அதன்போது காய்ச்சல் அதிகமாக இருந்ததால் குடும்பத்தினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை அளித்தும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட வலிக்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் வயிற்றில் எக்ஸ்ரே (X -Ray) பரிசோதனை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

பரிசோதனையின் படி இந்த நோயாளியின் வயிற்றில் பல உலோகப் பொருள்கள் பதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக செயற்பட்ட வைத்திய குழுவினர் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளியின் உடலில் இருந்து பொருட்களை வெற்றிகரமாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மருத்துவ வாழ்வில் தான் எதிர்கொள்ளும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல்முறை என அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அஜ்மீர் கல்ரா வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உடலில் இருந்து அனைத்து பொருட்களையும் அகற்றிய பின்னரும் நோயாளியின் உடல்நிலை சீராக இல்லை என்று வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

Unbelievable material found in Operation

இந்த பொருட்கள் நோயாளியின் வயிற்றில் நீண்ட காலமாக இருந்ததாகவும், இதனால் மற்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அறுவைசிகிச்சைக்குப் பின்னர், நோயாளியின் குடும்பத்தினர், அந்த நபர் இரண்டு ஆண்டுகளாக வயிற்று நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் எப்போது, ​​​​எப்படி இவற்றை உட்கொண்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அவர் பல வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டாலும், அவர்களில் யாராலும் அவரது வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலை மருத்துவத்தில் ”Pica” என்று அழைக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உணவு அல்லாத பொருட்களை வலுக்கட்டாயமாக விழுங்குகிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மனநலக் கோளாறு உள்ளவர்களுக்கு இது ஒரு பொதுவான நிலை என்று தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.