சப்பாத்து காலால் தீயை அனைத்த பொலிஸார்: குருந்தூர்மலையில் பதற்றம்: சிங்கள மக்களை ஒன்றிணைய கோரிய தேரர்

0
156

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிக்குகளும், பொலிஸாரும் அதற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிஸார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி நேற்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக மக்கள் அங்கு சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன் பௌத்த பிக்குகளும் வருகைதந்திருந்தனர்.

இங்கு தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற உத்தரவின் படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்ததையடுத்து

தகரத்தின் மீது பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொங்கல் வைக்க தீ மூட்டப்பட்ட போது முல்லைத்தீவு பொலிஸார் அங்கு வருகை தந்து சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து பொலிஸ் , விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குருந்தூர் மலையில் நடைபெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் இனவாத கலவரம் ஏற்படலாம் என போராட்டத்திற்கு அப்பால் என்ற அமைப்பின் தலைவரான பலாங்கொடை சுஸ்ஸப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

குருந்தூர் மலை தொல்பொருள் பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இருப்பது விகாரையாக குறிப்பிட்டு பௌத்த நடவடிக்கைகள் திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு பொங்கல் நிகழ்வை நடத்தி திரிசூலம் ஒன்றை அமைக்க முயற்சிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின

இதேவேளை இவர்கள் பௌத்த அடையாளங்களை இந்து கோவிலாக மாற்றி இனவாத கலவரத்தை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர் என்றும் இதனால் பொங்கல் நிகழ்வுக்கு செல்வோர் அங்கு போவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இல்லையேல் அங்கே மோதல்களை ஏற்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தி தொழில் பொருட்களை அளிப்பதும் அவர்களின் திட்டமாக இருக்கலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முன்னர் ஏற்பாட்டாளர்கள் அங்கு வருவதற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பலாங்கொடை சுஸ்ஸப தேரர் குறித்த கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள தமிழ் “தீவிரவாதிகள்” மற்றும் இந்து மதகுருமார்கள் ஒன்றிணைந்து மிக பெரிய பூஜை ஒன்றை நடத்தி இந்து ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கல்கமுவ சாந்தபோதி தேரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் குறித்த திட்டத்தை முறியடிப்பதற்கு சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறித்த பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.