சூடானில் உள்நாட்டு போர் தீவிரம் – ஒரே புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு

0
155

ஆபிரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் சடலங்கள் ஒரே புதைக்குழிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி உள்நாட்டு போர் தீவிரம் மூண்டது.

இந்த போர் தீவிரத்தை நிறுத்தவதற்கு பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை அது பயனளிக்கவில்லை எனலாம்.

இதன் காரணமாக சூடான் முழு அளவிலான உள்நாட்டு போரின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

சூடான் தலைநகர் கார்டோமில், கடந்த ஏப்ரல் 15 அன்று வெடித்த உள்நாட்டு போரின் விளைவாக சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

sudan people leaving the country

இதுவரையில் குழந்தைகள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான சாட்வில் ஏற்கனவே உள்ள 7 முகாம்களில் 36,423 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2,45,000 அகதிகள் உருவாகுவார்கள் என அகதிகளுக்கான ஐ.நா. ஆணையகம் (UN High Commissioner for Refugees)தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போர் எதிரொலியாக தலைநகர் கார்டூமில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 60 குழந்தைகள் உணவு தட்டுபாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றது.

ஆறு வாரங்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வார இறுதியில் 2 நாட்களில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது.

ஆதரவற்றோர் இல்ல அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களின் அறிக்கையின்படி, இறந்தவர்களில் மூன்று மாத கைகுழந்தைகளும் அடங்குவர்.

போதிய உணவுகள் கிடைக்காமல் பட்டினியாலும், காய்ச்சலினாலும் இந்த குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.