நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும்

0
210

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் எதிர்வரும் வாரங்களில் சீனாவுக்குப் பயணம் செய்வார் என்று அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் (BloombergNews) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின்னர் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செய்தி நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

ஆனாலும் அண்டனி பிளிங்கனின் சீனப் பயணம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரபூர்வமாகச் செய்தி வெளியிடவில்லை. சீனாவின் வெளியுறவு அமைச்சும் அவ்வாறு அறிவிக்கவில்லை.

இருந்தாலும் அண்டனி பிளிங்கனின் வருகையைச் சீனா வரவேற்பதாகக் கடந்த புதன்கிழமை செய்தி வெளியாகியிருந்தது.

அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காண்பித்து வெளியிடப்பட்டிருந்த செய்தியில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி விமர்சிக்கப்பட்டுமிருந்தது. அமெரிக்காவை மையப்படுத்திய நேட்டோ பிளஸ் கட்டமைப்பில் இந்தியா சேரவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அண்டனி பிளிங்கன் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதன் நோக்கம் பற்றிய சந்தேகங்களையும் குளோபல் ரைமஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

நேட்டோவில் இந்தியா இணையாது

இந்த நிலையில் நேட்டோ பிளஸ் இராணுவக் கூட்டணியில் இந்தியா இணையும் என்று அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் நிராகரித்துள்ளதாக இந்தியா ரீவி நியூஸ் செய்தி (indiatvnews) இணையம் சென்ற வெள்ளிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது. 

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான மூலோபாயப் போட்டியில் வெற்றி பெறுவதும், தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வதும், இந்தியா உள்ளிட்ட தமது நட்பு நாடுகளுடனும் பாதுகாப்புப் பங்காளிகளுடனும் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த வேண்டும்” “நேட்டோ பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியாவைச் சேர்ப்பது, உலகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் அமெரிக்க – இந்திய அரசுகளின் நெருங்கிய கூட்டுறவு அடிப்படையில் கட்டமைக்கப்படும்” என நேட்டோ பிளஸ் கட்டமைப்பில் இந்தியாவை இணைக்கும் நோக்கில் செயற்பட்ட அமெரிக்கக் காங்கிரஸ் தெரிவுக்குழு பரிந்துரைத்தது.

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும் | Modi Us Visit And Delhi Rejects Nato

இந்த நிலையில் அதுவும் நரேந்திரமோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ள பின்னணியில் அமைச்சர் ஜெய்சங்கர் இப் பரிந்துரையை நிராகரித்துள்ளார். நேட்டோ கட்டமைப்பின் பிரகாரம் இது இருபத்தியொன்பது ஐரோப்பிய மற்றும் இரண்டு வட அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட முப்பத்தியொரு உறுப்பு நாடுகளுக்கு இடையேயான இராணுவக் கூட்டணியாகும்.

அதன் முக்கிய நோக்கம் அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகள் மூலம் அதன் உறுப்பு நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இப் பின்புலத்தோடு இந்தியாவையும் சேர்த்து நேட்டோ பிளஸ் கட்டமைப்பை வலுப்படுத்த சக்தி மிக்க அமெரிக்கக் காங்கிரஸ் தெரிவுக்குழு பரிந்துரைத்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து கடும் விமர்சனக் கருத்துக்கள் எழுந்தன.

நேட்டோ பிளஸ்

சில இந்திய அச்சு ஊடகங்கள் மோடி அரசை விமர்சித்துமிருந்தன. நேட்டோ பிளஸ் என்பது உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஐந்து உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவை ஒன்றிணைக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகும். இதில் ஆறாவது நாடாக இந்தியாவைச் சேர்க்கும் உத்திகள் அமெரிக்க அரசினால் வகுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஜெய்சங்கர், ‘நேட்டோ கட்டமைப்பு இந்தியாவுக்கு பொருந்தாது’ என்று கூறிவிட்டார். நரேந்திர மோடி எதிர்வரும் இருபத்தியோராம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்கு முன்னதாக நேட்டோவில் இந்தியா இணைய வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது.

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும் | Modi Us Visit And Delhi Rejects Nato

ஆனால் இந்திய அரசியலில் எழுந்த கடும் விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்திய மத்திய அரசு அதிகாரபூர்வமாக மறுத்திருக்கிறது. இதனால் புவிசார் அரசியல் பொருளாதார நகர்வுகளில் வேறு திருப்பங்களை விரைவில் எதிர்பார்க்க முடியும். அத் திருப்பங்கள் இந்தியாவுக்குத் தலைவலியாகவே இருக்கும் என்பதும் கண்கூடு. அதேநேரம் ரசியாவுடனான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை ரசியா, இந்தியாவுக்கு வழங்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் அமெரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் பலம்வாய்ந்த நாடாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிச கொள்கைகளே இருந்தன. ஆகவே சோவியத் மற்ற நாடுகள் மீது படையெடுப்பதைத் தடுக்கக் கூறியே நேட்டோ அமைப்பு அன்று உருவாக்கப்பட்டது.

அப்போது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகியவை உள்ளிட்ட பன்னிரெண்டு நாடுகள் மாத்திரமே இணைந்து இந்த அமைப்பை 1949இல் உருவாக்கியிருந்தன. நேட்டோ ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் மற்றய உறுப்பு நாடுகள் கூட்டுச் சேர்ந்து உதவியளிக்கும். ஆகவே இப் பின்னணியில் மேலும் பல நாடுகள் நேட்டோவில் இணைந்தாலும் ஆசியாவில் வல்லராசாகக் கருதப்படும் இந்தியா, நேட்டோ அமைப்பில் இணையவில்லை.

ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் 2016 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில் இந்தியாவை ஒரு அறிவிக்கப்படாத நேட்டோ நாடாகவே அமெரிக்கா அணுகியிருந்தது. இப் பின்னணியிலேயே ஜோ பைடன் நிர்வாகமும் இந்தியாவை முதலில் நேட்டோ பிளஸ் கட்டமைப்பில் இணையுமாறு அதிகாரபூர்வமாகக் கேட்டிருந்தது. மோடியின் அமெரிக்கப் பயணத்துடன் இந்தியா நேட்டோவில் இணைந்துள்ளது என்ற அறிவிப்பைச் செய்யும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருந்திருக்கிறது.

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும் | Modi Us Visit And Delhi Rejects Nato

மூலோபாய ரோந்துப் பணி

ஏனெனில் அமெரிக்க ஊடகங்கள் மிக நுட்பமாக இந்தியா பற்றியும் இந்தியப் பாதுகாப்புக் குறித்தும் அக்கறையுடன் விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆனால் ரசியாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வரும் சூழலில் நேட்டோவில் இணைவதா இல்லையா என்று மோடி அரசு குழப்பியிருந்தது உண்மையே. சீனாவிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கான கூட்டணி புதுடில்லிக்குத் தற்போது அவசியமே தவிர, நேட்டோவில் இணைவதல்ல.

அதேநேரம் சென்ற செவ்வாய்க்கிழமை சீனா மற்றும் ரசிய இராணுவத்தினர் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ஒரு கூட்டு வான்வழி மூலோபாய ரோந்துப் பணியை மேற்கொண்டன. இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது என்று சீன நிபுணர்கள் கூறியதாக பாகிஸ்தான்ரூடே (pakistantoday) சென்ற புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான தொடர் ஆத்திர மூட்டல்களின் தாக்கத்தை ஈடுகட்டவே இப்பயிற்சி என்றும் அந்த விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம் சீன மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்பு அட்டவணையின் அடிப்படையில், இரு தரப்பினரும் செவ்வாயன்று ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் ஆறாவது கூட்டு வான்வழி மூலோபாய ரோந்து நடத்தியதாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரட்டைத்தன்மை நீடிக்க இடமில்லை

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சின் கூட்டுப் பணியாளர்கள் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் இரண்டு u-6K குண்டுவீச்சு விமானங்களும், இரண்டு ரசிய Tu-95 குண்டுவீச்சு விமானங்களும், இரண்டு அடையாளம் தெரியாத சீனப் போர் விமானங்களின் துணையுடன், கிழக்கு சீனக் கடல் மற்றும் ஜப்பான் கடல் மீது ஒன்றாகப் பறந்ததகக் கூறப்பட்டிருந்தது.

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும் | Modi Us Visit And Delhi Rejects Nato

இவ்வாறு ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற சங்ரி-லா உரையாடலில் சீன – அமெரிக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு இடையே எந்த சந்திப்பும் நடைபெறவில்லை.

இருதரப்பும் சந்தித்து உரையாடுவர் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் சங்ரி-லா உரையாடல் குறிப்பிடத்தக்களவு வெற்றி பெறவில்லை என்று குளோபல் ரைமஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஆகவே அமெரிக்க – இந்திய உறவு, ரசிய – இந்திய உறவு என்ற இரு தளங்களில் எந்தத் தளம் மேலோங்கும் என்று கூறுவதைவிடவும், இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் பின்பற்றப்படும் இரட்டைத்தன்மை நீடித்துச் செல்ல இடமில்லை என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் அணிசேராக் கொள்கை என்று கூறிக் கொண்டு அன்றைய சோவியத் யூனியனுடன் இரகசிய உறவைப் பேணியது போன்று, தற்கால நவீன புவிசார் அரசியல் பொரளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ரசியாவுடனும் மறுபுறத்தில் அமெரிக்காவுடனும் உறவைப் பேணிக் கொண்டு சீனாவிடம் இருந்து வட இந்திய எல்லைகளைப் பாதுகாத்துவிட முடியும் என புதுடில்லி நம்புவது வேடிக்கை.

இலங்கை விவகாரத்திலும் இந்தியா பின்பற்றும் இவ்வாறான இரட்டைத் தன்மைக் கொள்கைகள் இந்தோ – பசுபிக் பிரந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கும் இலங்கை சீனாவின் தளமாக மாறுவதற்கும் இடமளிக்குமே தவிர இந்தியாவின் நட்பு சக்தியாக இலங்கை மாறுவதற்கு வாய்ப்பில்லை.

இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் தற்போது ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல சிங்களக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே மிக நிதானமாகக் கையாளுகின்றனர். புவிசார் அரசியல் சூழலில் இந்திய அரசியல் நகர்வுகளையே சிங்களக் கட்சிகள் நுட்பமாக அவதானிக்கின்றன. நிதியுதவி வழங்குவதில் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் இலங்கை, இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இந்தியாவைவிடவும் சீனாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்பதிலேயே விருப்பம் கொண்டுள்ளது.

ஈழத்தமிழர்களுடன் நெருங்கிவிடக்கூடாது

அதேநேரம் இந்தியா ஈழத்தமிழர்களுடன் நெருங்கிவிடக்கூடாது என்பதிலும் இலங்கை மிகக் கவனமாகவுமுள்ளது. தமிழ் நாட்டு அரசு கூட, ஈழத்தமிழர் விவகாரம் குறித்த புதுடில்லியின் நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கிலேயே புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறொகொட செயற்படுகிறார் என்பதும் வெளிப்படை.

முன் எப்போதுமில்லாத அளவுக்குப் புதுடில்லியில் இருந்து தமிழ் நாட்டுக்குப் பயணம் செய்து வரும் மிலிந்த மொறொகொட, இலங்கைத்தீவின் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார். அதாவது இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நியாயப்படு்தும் நுண் அரசியலில் ஈடுபடுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்ற பிரதான சிங்கள அரசியல் தலைவர்கள் இந்திய அரசியல் நகர்வுகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையின் முக்கியத்துவத்தைச் சர்வதேச அரங்களில் இருந்து குறைத்து அதனை இலங்கைதீவின் உள்ளக விவகாரமாக மாற்றும் பொறிமுறைகளைத் தயாரிக்கின்றனர். சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

நேட்டோவை நிராகரித்த டில்லியும் மோடியின் அமெரிக்கப் பயணமும் | Modi Us Visit And Delhi Rejects Nato

இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது முப்பது வருட போர் மற்றும் ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்களினால் ஏற்பட்டது. ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் உருவாகியுள்ள புவிசார் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் இலங்கைப் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியதாகக் கூறவும் முடியாது.

ஏனெனில் புவிசார் அரசியல் போட்டிகளினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு மேலும் பல உதவிகள் ஏட்டிக்குப் போட்டியாகக் கிடைத்திருக்கின்றன.

குறைந்த பட்சம் இலங்கை மூச்சு விடுவதற்கு அமெரிக்க – இந்திய, சீன அரசுகள் உதவியளிக்கும் என்று சிங்களத் தலைவர்களுக்கு நன்கு புரியும். இந்தியாவிடம் ஈழத்தமிழர் நெருங்கிவிடக் கூடாது என்ற நோக்கில் 2009 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரான சூழலிலும் சிங்களத் தலைவர்கள் கையாண்டு வரும் உத்திகள் பற்றிப் பல தடவைகள் இந்த அரசியல் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவை ஈழத்தமிழர் பக்கம் நிற்க வைப்பதற்கான எந்த ஒரு நகர்வுகளிலும் தமிழ்த்தரப்பு உரிய முறையில் ஈடுபடவேயில்லை.

உத்திகளைக் கையாள்வதைவிடவும், தமிழ்த்தரப்பை இந்தியா கையாண்ட சந்தர்ப்பங்களே அதிகம். பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவைக் கேட்பதைத் தவிர, நிரந்தர அரசியல் தீர்வுக்கான உருப்படியான அரசியல் உத்திகள் – பொறிமுறைகள் இதுவரை தமிழ்த் தரப்பினால் தயாரிக்கப்படவில்லை.