777 சார்லி விமர்சனம்

0
694

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் ரக்ஷித் ஷெட்டி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார். யாருடனும் பழகாமல் தனக்கென்று தனி உலகத்தில் வாழ்ந்து வரும் ரக்ஷித் ஷெட்டியிடம் ஒரு நாய் வழி மாறி கிடைக்கிறது.

முதலில் நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி அதன்பின் அதனுடன் பழக ஆரம்பிக்கிறார். நாயும் ரக்ஷித் ஷெட்டியை விட்டு செல்ல மறுக்கிறது. ஒரு கட்டத்தில் நாய்க்கு கேன்சர் இருப்பது ரக்ஷித் ஷெட்டிக்கு தெரிய வருகிறது. நாய் மீது அன்பு பாசம் வைத்திருக்கும் ரக்ஷித் ஷெட்டியால் இதை தாங்க முடியவில்லை.

இறுதியில் நாயை ரக்ஷித் ஷெட்டி குணப்படுத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ரக்ஷித் ஷெட்டி, தர்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். யாருடனும் பழகாமல் வெறுப்பான முகத்துடனே வலம் வரும் ரக்ஷித் ஷெட்டி, நாயுடன் பழக ஆரம்பித்தவுடன் முகபாவனைகள் அனைத்தையும் மாற்றி வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

777 Charlie Box Office Day 4 (All Languages): Super Steady On Monday, An  Inch Away From Making 100% Profit

இரக்ஷித் ஷெட்டிக்கு பிறகு சார்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. பல இடங்களில் அபார நடிப்பால் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. ஆரம்பத்தில் தனது சுட்டித்தனத்தாலும், சேட்டைகளாலும் நம்மை சிரிக்கவைக்கும் சார்லி, தனது நுணுக்கமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நம் கண்களை குளமாக்கிவிடுகிறது.

சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் பாபி சிம்ஹா. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

நாயை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து இருக்கிறது. மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள பாசத்தை எமோஷனல் குறையாமல் கொடுத்த இயக்குனர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள். நாயை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

நோபின் பால் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல் அரவிந்த் எஸ்.காஸ்யப்பின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘777 சார்லி’ பாச பிணைப்பு.