பிள்ளையானை கைது செய்தால் பல உண்மைகள் அம்பலமாகும்: நாடாளுமன்றில் சாணக்கியன் பகிரங்கம்

0
33

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளனர் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்து உண்மைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையில் புலனாய்வுப் பிரிவினால் மூன்று இனங்களையும் உள்ளடக்கிய புலனாய்வுக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டில் இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டது.

பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதின், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டது. கலீல் என்பவர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் பெற்றோரிடம் கப்பம் கோரி 6 வயது வர்ஷா என்ற சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொலை செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலைக்கு பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜனார்த்தனன், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் பொறுப்பில் இருந்த போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 8 வயது சிறுவனொருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காக கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களை கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்திரமற்ற நிலையை கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாக பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

எனவே பிள்ளையானை காப்பாற்ற நினைக்காது, அவரிடம் உள்ள வாக்குகளை பார்க்காது அவரை கைது செய்யுங்கள். இவர் ஒருவரை கைது செய்தால் 2005ஆம் ஆண்டில் இருந்து உண்மைகளை அறியலாம்” எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.