வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும் – குகதாஸ்

0
269

இலங்கைத்தீவில் 1948 ஆண்டின் பின்னர் வன்முறையை வளர்த்தவர்கள் ஆட்சிக்குத் தொடர்ந்து வந்த சிங்கள தலைவர்களும் அவர்கள் சார்ந்த அரசாங்கமும் என்ற உண்மையைச் சிங்கள பெரும்பாண்மை மக்கள் உணரும் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த போது பூர்வீக தமிழர்களின் தமிழ்மொழி அரசியலமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் காலமுகத்திடலில் சாத்வீக வழி சத்தியாக்கிரக போராட்டத்தை 1956 யூன் 5 ஆம் திகதி நடத்தினர்.

இதன்போது இன்று கோட்டா கோ கோம் போராட்டத் தரப்பின் மீது எப்படி ஒரு வன்முறை ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டதோ இதைவிட மோசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் மீது இதே காலிமுகத்திடலில் பொலிஸாரினாலும் குண்டர்களினாலும் கோரமான வன்முறை மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி 1977 வரை மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியதன் விழைவே ஆயுதப் போராட்டமாக மாறியது. உண்மையாகத் தமிழர்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதம் தூக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்.

அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அத்தகைய அவலநிலைக்கு அரசியல், பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. 1956 தமிழர்களுக்குச் செய்த தவறை மீண்டும் 2022 ஆட்சியாளர்கள் அதே காலிமுகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய தாம் சார்ந்த சிங்கள சகோதரர்களுக்கும் வன்முறையைப் பிரயோகித்துள்ளார்கள்.

நாகரிகம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகவும் பிற்போக்காக ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க வாக்களித்த மக்களையே வன்முறை மூலம் அடக்கும் கிட்லர் ஆட்சியாளர்களை நினைக்கத் தலைகுனிவாகவும் வெட்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் பல்லின மக்களையும் அவர்களது நியாயமான அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சியாளர்கள் வரும் வரை இலங்கைத் தீவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும். இதனைச் சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.