நாட்டில் பல பாதகமான விளைவுகள் ஏற்படலாம்

0
33

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கத்தின் பின்னர், இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் அபிவிருத்தியடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் விசா கட்டணத்தை அதிகரித்துள்ளது. முன்னேற்றம் கண்டு வரும் இந்நாட்டின் சுற்றுலாத்துறை இதனால் மீண்டும் வீழ்ச்சியை நோக்கி நகரலாம். சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தால், அது முழு நாட்டிற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வீசா கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று (26)  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசா கட்டணம் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சார்க் மற்றும் சார்க் அல்லாத நாடுகளுக்கு அறவிடப்படும் விசா கட்டணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

முந்தைய வீசா கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் எத்தனை சதவீதம் மற்றும் எவ்வளவு தொகை வீசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஒப்பீட்டு ரீதியிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை ஹோட்டல் அசோசியேஷன் போன்ற இரண்டு நிறுவனங்கள் விசா கட்டண  அதிகரிப்பால் ஆச்சரியமடைந்துபோயுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இக்கட்டணம் அதிகமாகும். வீசா கட்டணம் தொடர்பில் சுற்றுலா தொழில்துறையின் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா என்பதில் சிக்கல் நிலவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சார்க் நாடுகளுக்கு 20 முதல் 35 டொலர் வரையிலும், சார்க் அல்லாத நாடுகளுக்கு 50 முதல் 75 டொலர் வரையிலான சேவைக் கட்டணமும், மேலதிக கட்டணமும் அறவிட்டு வருகிறது. சார்க் அல்லாத நாடுகளின் விசா கட்டணம் 100 டொலர்களைத் தாண்டியுள்ளது. சார்க் நாடுகளுக்கான வீசா கட்டணம் 58 டொலர்களை தாண்டியுள்ளது, இதன் காரணமாக முன்னேற்றம் கண்டு வந்த சுற்றுலாத்துறை கூட ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தாய்லாந்து 30-50 டொலர்களுக்கு இடையிலும், கம்போடியா 36 டொலர்களையும், வியட்நாம் 25 டொலர்களையும், பாலி 50 டொலர்களையும், கென்யா 51 டொலர்களையும், மாலைதீவு விசா கட்டணத்தை அறவிடாத நிலையில்,

இவற்றுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் வீசா கட்டண அதிகரிப்பு உயர் மட்டத்திற்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் வழங்கப்பட்ட வீசா முறைக்கு அப்பால் வீசா விண்ணப்ப முறையை நாடுவதற்கான காரணங்கள் மற்றும் குடிவரவு திணைக்களம் இது தொடர்பில் கொண்டுள்ள கட்டுப்பாடு மற்றும் இதனால் தொழில் இழப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் சிக்கல்கள் நிலை நிலவிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா பயணிகளுக்கு Single Entry விசா வழங்க முடியாது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக வழங்கப்படும் விசாக்களை பயன்படுத்தி இந்நாட்டிற்கு வரும் சிலர் இந்நாட்டில் சட்டவிரோத மற்றும் மோசடியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகையவர்கள் இணைய வழிக் கடன் திட்டங்களையும் முன்னைடுத்து வந்தனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

விசா வழங்கும் முறை மாற்றம் தொடர்பில் பல அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது இதற்கான உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. 

உப குழு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபடி, தற்போதைய கட்டமைப்பில் உள்ள மென்பொருள் வசதிகள் புதிய முறைமையில் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைப்படி, விண்ணப்பதாரர்களிடம் ஒரு டொலர் கட்டணம் அறவிடப்பட்டது, ஆனால் புதிய முறையின் கீழ், இது 18 டொலராக அதிகரித்துள்ளது.

 இது எமது நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேள்வி எழுப்பினார்.