சிறிலங்கா அரச தலைவர் பதவி விலகும்வரை தொடர்ச்சியான போராட்டங்கள் தொடருமென கூறிய அனுரகுமார திஸாநாயக்க

0
155

சிறிலங்கா அரச தலைவர் பதவி விலகும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதுடன், பொது மக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் தேசிய மக்கள் சக்தியினை தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு கோடி மக்களின் கோரிக்கையை தனிநபர் ஒருவர் புறந்தள்ளியுள்ளதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

”பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தாலும் அரச தலைவர் பதவி விலகமாட்டார் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.

அதுமட்டுமன்றி வீதியில் இறங்கி போராடும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை என்பதிலும் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனால் இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறுத்திவிடக்கூடாது. இரண்டு கோடி மக்களின் கோரிக்கையை தனிநபர் ஒருவர் புறந்தள்ளியுள்ளார். அரச நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. கைத்தொழில்த்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை அவசரமாக மூட நேரிட்டுள்ளது. சிறுபோகத்துக்கு உரமின்றி மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒருவர் அனைத்து அதிகாரங்களையும் தம்வசம் வைத்துக்கொண்டு அனைத்து விடயங்களும் அரங்கேற இடமளித்துள்ளார்.

இந்த தனிநபரை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. அவர் அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்யும்வரை அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

பொது மக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை நாம் வழங்குவோம். அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஊடாகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.