பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்கல் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள தகவல்!

0
446

சவுதி அரேபியா கொவிட்-19 தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அறிவித்துள்ளது.

சவுதிக்கு வருகை தருபவர்கள் எவரும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது PCR சோதனை முடிவைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அனைத்து தனிமைப்படுத்தல் விதிகளையும் அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் ட்விட்டர் பதிவில் இந்த மாற்றங்களை அறிவித்தது, மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான காரணங்களையும் வெளியிட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று நாட்டில் கணிசமாகக் குறைந்துள்ளன, 5 சதவீதத்திற்கும் குறைவான தொற்று பதிவுகளே உள்ளன, அதே நேரத்தில் தகுதியான மக்கள்தொகையில் 99 சதவீதம் பேர் – 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் – இப்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா இப்போது நாடு முழுவதும் கொவிட்-19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளது. அனைத்து திறந்த மற்றும் மூடிய இடங்களிலும் சமூக-தூர நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் திறந்த வெளிப்பகுதிகளில் முககவசங்களை அணிவது இனி தேவையில்லை.

பாடசாலை மாணவர்கள் கூட்டம், தொழுகை,, விளையாட்டு நேரங்கள் அல்லது பாடங்களின் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதில்லை, மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் மசூதி உட்பட மசூதிகளில் தொழுபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. மசூதிகளுக்குள் முககவசங்களை அணிய வேண்டும்.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இரண்டு புனித மசூதிகளுக்கு மக்கள் இனி ஒன்லைனில் பிரார்த்தனை இடங்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று அறிவித்தது.

ஆனால் உம்ரா செய்ய அல்லது பிரார்த்தனை செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் – நபிகள் நாயகத்தின் மசூதியின் இதயமாக கருதப்படும், அவரது கல்லறைக்கு அருகில் உள்ள ரவ்தாவில் – இன்னும் ஈட்மர்னா அல்லது தவக்கல்னா பயன்பாடுகள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முடிவுகள் “கொரோனா வைரஸின் தொற்றுநோயியல் நிலைமையைப் பின்தொடர்தல், திறமையான சுகாதார அதிகாரிகளின் கருத்து மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அடையப்பட்ட முன்னேற்றம்” ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தன என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசோதோ, ஈஸ்வாடினி, மொசாம்பிக், மலாவி, மொரிஷியஸ், ஸாம்பியா, மடகஸ்கர், அங்கோலா, சீஷெல்ஸ், கொமரோஸ், நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 17 நாடுகளுக்கான நேரடி விமானங்களின் இடைநிறுத்தத்தையும் இராச்சியம் நீக்கியது.

மூன்றாவது பூஸ்டர் டோஸ் எடுக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டிய அதிகாரிகள், அலுவலகங்கள், சில பொது மற்றும் தனியார் கட்டடங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குள் நுழைய தவக்கல்னா பயன்பாடு இன்னும் தேவை என்று கூறினார்.