ரஷ்யா, உக்ரைன் போர்க்களத்தில் இலங்கையின் கூலிப்படையினர்: உண்மையை வெளியிடுமா அரசு?

0
36

ரஷ்யா மற்றும் உக்ரைனின் இராணுவ சேவைக்கு இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப்படைகளாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கூலிப்படையாக செயற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கடந்த காலத்தில் போர் களத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு ஆட்கடத்தல் நடவடிக்யைில் ஈடுபட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்றைய சபை அமர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

“மோசடியில் ஈடுபடுபவர்கள் தொழில் பெற்றுத்தருவதாக கூறி தனிநபரொவரிடமிருந்து 1.8 மில்லியன் ரூபா பணம் பெறுகின்றனர். அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு எத்தனை இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்?

இந்த மோசடிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,

“இலங்கையர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று தொழில் பெற்றுத் தருவதாக கூறி இராணுவத்தில் கூலிப்படையாக இணைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயங்கள் பொலிஸார் மற்றும் குற்றப் புலானாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெளிவிவகார அமைச்சும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றில் நாளை (24) வியாழக்கிழமை அறிக்கை சமர்ப்பிப்பார்” என தெரிவித்துள்ளார்.