பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

0
38

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

பண்டைய பெண் பாதிரியார்கள் போன்று உடை அணிந்த நடிகைகளால் குழிவு வில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய கதிரிலிருந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.

கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடினார்.

கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச், பிரெஞ்சு ஒலிம்பிக் குழுத் தலைவரும் சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினருமான டேவிட் லப்பாட்டியென்ட், பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சரரும் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் அமைச்சருமான அமேலி ஒளடியா கெஸ்டேரா உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

ஒலிம்பிக் சுடர் ஏற்றும் வைபவத்தை ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

அமைதி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒலிம்பிக் சுடர் , ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறவுள்ள பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் கிரேக்கம் முழுவதும் பயணிக்கவுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் பிரெஞ்சு அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட நிலப்பகுதிகளும் ஒலிம்பிக் சுடர் பயிணிக்கவுள்ளது.

தொடர்ந்து பிரான்ஸில் வளம் வரும் ஒலிம்பிக் சுடர், பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தொடக்க விழாவின்போது பாரிஸை சென்றடையும்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும்.