சுற்றுலா பயணியை ஏமாற்றிய இஸ்லாமியருக்கு ஒரு நியாயம்? களுத்துறை பௌத்தருக்கு ஒரு நியாயமா?

0
16

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் சுற்றுலா பயணியொருவரை இடியப்ப கொத்து ஒன்று 1800 ரூபாய் என்று கூறி ஏமாற்றி விற்க முயன்றதோடு அவரை திட்டியமைக்காக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தால் ரூபாய் 50000 ரொக்கப்பிணையிலும் ரூபாய் பத்து இலட்சம் சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்தனைக்கும் அந்த சுற்றுலா பயணி உணவை பெற்றுக் கொள்ளமுன்பே இச்சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் வரைக்கும் விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

கருணாகரன் குணாளன் கோரிக்கை

ஆனாலும் சிலதினங்களுக்கு முன்பு களுத்துறை மாவட்டத்தில் சுற்றுலா பயணியொருவரை நூறு ரூபாய் பெறுமதிமிக்க வடையொன்றினை தான் ஒரு தூய சிங்கள பௌத்தனென்று கூறிக்கொண்டு 800 ரூபாய்க்கு ஒரு உணவக உரிமையாளர் விற்றதோடு குறித்த சுற்றுலா பயணியோடு முரண்பட்டிருந்த காணொளி வெளியாகியிருந்த போதிலும் இதுவரை அந்த உணவக உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையோ அல்லது சுற்றுலா தொடர்பான அமைச்சு திணைக்களங்களோ எதுவித நடவடிக்கையினையும் மேற்கொண்டிருக்கவில்லை.

அந்த நபர் பல்வேறு வாக்குவாதங்களின் பின்னர் பணத்தினை திருப்பிச் செலுத்தியிருந்தாலும் அவரது செயற்பாடு திட்டமிட்டு ஏமாற்றும் செயற்பாட்டுக்குரிய குற்றமாகும்.

இவ்விரு நபர்களும் எமது நாட்டின் பண்பாட்டின் நற்பெயருக்கு கேடுவிளைவித்தது மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கு எண்ணியிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் எமது நாடு சுற்றுலா பயணத்துறையின் வருமானத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்றங்கள் இனப்பாகுபாடு பாராது தண்டிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டுமென்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார்