பிரபாகரனுக்குப் பிறகு தமிழ்த் தலைமையை மக்கள் காணவில்லையா?: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு வெளிக்கொணர்வு

0
17

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் சிறந்தவொரு தமிழ் தலைமையை மக்கள் அடையாளம் காணவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மன்னாரில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழரசு கட்சியின் பொதுவேட்பாளர் குறித்து தமது நிலைப்பாட்டையும் இவ்வாறு எடுத்துரைத்திருந்தார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் குறித்து தமிழரசு கட்சி இதுவரை எதுவித தீர்மானமும் மேற்கொள்வில்லை.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என சிலர் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை அது மிகவும் கடினமானது. குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து கட்சி ஒரு சிறந்த தீர்மாத்தை மேற்கொள்ளும்” என சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.