முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை; பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல்கள்

0
43

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையானது இந்திய தேர்தலில் இருபக்க விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றன.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் கடந்த 30 ஆண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு தற்போது முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்றைய தினம் தாயகம் திரும்பியிருந்தனர். இதேவேளை கடந்த மாதம் சாந்தன் மரணமடைந்திருந்த நிலையில் அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விடுதலையின் பின்னணி அரசியல்

ஆளும் பாஜக இவர்களின் விடுதலையை ஒரு நல்லெண்ண சமிஞ்சையாக காண்பித்து தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்ய காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை திமுக அரசாங்கமும் இவர்களின் விடுதலையை தமது அரசியலுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்வதற்கு முற்படும். மேலும் சீமானுக்கும் இதன் ஊடாக ஒரு சாதக சமிஞ்சையும் காணப்படுகின்றது.

ஆனாலும் காங்கிரஸ் தரப்பு வடக்கில் மோடி அரசாங்கத்திற்கு எதிராக இவர்களின் விடுதலையை பயன்படுத்தலாம்.ஒரு நாட்டின் பிரதமரின் கொலையுடன் தொடர்புடையவர்களை விடுவித்தமையானது பாரதூரமான விடயம் என சத்தமிடக்கூடும்.

ஆனாலும் காங்கிரஸ் தமிழகத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கும். ஆனாலும் ராஜீவ் காந்தியும் அவருடன் தொடர்புடைய கொலையும் கடந்த காலத்தில் பாரிய அரசியலாக காணப்பட்டிருந்தது.

இலங்கையில் நடக்கப் போவது என்ன?

முருகன், றோபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையை வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றது.

இதேவேளை ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. தமிழரசு கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதேபோல ஏனைய கட்சிகளும் கொஞ்சம் அமைதியாகவே செயற்படுகின்றன.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது ஆட்சியில் முருகன், றோபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலை சாத்தியமானது அவர்கள் மன்னிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர் என்ற பிரசாரத்தினை முன்னெடுத்து தமிழ் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய முற்படுவார்.

இந்தியாவிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பியவர்கள், நீண்ட நேர விசாரணையின் பின்னர் எந்தவித வழக்கு தாக்கலும் இன்றி விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனாலும் முருகன், றோபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இறுதி நேரத்தில் மாறிப் போனதும் பலராலும் அவதானிக்கப்பட்டது.

உண்மையில் முருகன், றோபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையானது பலராலும் வரவேற்கப்படுகின்ற விடயம். இருந்த போதிலும் அவர்களின் சமூக வாழ்விற்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது சகலரின் கடமையாகும்.