பாஜக ஆண்டதில் மக்கள் மாண்டது போதும்: தேர்தல் களம் விடுதலைப் போராட்டம் – ஸ்டாலின் விமர்சனம்

0
50

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் காரசாரமாக தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் ஆளும் பாஜகவினை பல்வேறு கட்சிகள் பலவகையில் விமர்சித்து வருகின்றன. அதேபோன்று பாஜகவும் ஏனைய அரசியல் கட்சி மீது சேறு பூசும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டை பாஜக. ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், என விமர்சித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்களைக் கூறி வாக்குகளைப் பெற நினைக்கின்றார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளர்களான சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே இவ்வாறு விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தற்போதைய தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம் எனவும், இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்திய கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.