டிஜிட்டல் துறையில் இந்தியாவின் உதவியை விரும்பு இலங்கை: சென்னை IIT யின் கிளையை நிறுவ ஏற்பாடு

0
64

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனைக்கான சட்டம், இந்தவருட நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (26) முற்பகல் ஆரம்பமான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

நாட்டின் பொருளாதார மாற்றத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம்

தகவல் தொழில்நுட்ப சபை போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளில் இருந்து விலகி, டிஜிட்டல் மாற்றத்திற்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI மையம்) உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விவசாயத்தை நவீனமயமாக்குவது, வறுமையை நிவர்த்தி செய்வது மற்றும் கல்வி முறையை சீர்திருத்துவது போன்றவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வறுமையைக் குறைக்கும் தேசிய இலக்குடன் அரசாங்கம் செயற்படுகிறது. 2035 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களில் வறுமை 10% ஐ தாண்டாது என்பதை உறுதிப்படுத்துவது எமது நோக்கமாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான திட்டமாகும்.

நவீனமயமாக்கலைத் தழுவ வேண்டிய தேவை உருவாகியுள்ளது

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்(IIT) கிளையை எமது நாட்டில் நிறுவுவதற்கும் அவர்களின் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட மூன்று பல்கலைக்கழகங்களை இங்கு முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான மூலோபாயங்களைப் பின்பற்றி இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு இந்திய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த திட்டங்களை செயல்படுத்த கூட்டு ஒத்துழைப்பு அவசியம். 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையை தயார்படுத்துவதில் நவீனமயமாக்கலைத் தழுவ வேண்டிய அவசரத் தேவை உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.