நடுக்கடலில் கறுப்பு கொடியுடன் யாழ்ப்பாண மீனவர்கள் போராட்டம்: கடற்படையின் ரோந்து படகுகள் கண்காணிப்பு

0
113

யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் இன்று காலை பத்து மணிக்கு சவுக்கடி கடற்பரப்பில் இருந்து இலங்கை எல்லைவரை சென்று கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 படகுகளில் 32 மீனவர்கள் கறுப்பு கொடியினை படகில் காட்டியவாறு எல்லையை நோக்கி பயணமாகி கடலினுள் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, தொப்புள் கொடி உறவுகளாக எம்மை பார்க்க தெரியவில்லையா, இழுவை மடி வலைகளை வெட்டி தொழிலின்றி தவிக்கின்றோம் என்ற பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின் போது எல்லைப்பகுயிதில் கடற்படையின் ரோந்து படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து கரையை நோக்கி வருகை தந்த மீனவர்கள் சவுக்கடி கடற்படை முகாம் முன்பாக அமர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி தமிழகம் – இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் அனுமதிச் சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.