அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற இளம் பெண்; மிரட்டிய கும்பல்!

0
108

பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு தனது கணவருடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25-02-2024) இடம்பெற்றுள்ளது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ‘ஹல்வா’ (அழகு அல்லது இனிப்பு என பொருள்) என அரபு மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் இஸ்லாமிய மதப்புத்தகமான குர்ஆனில் உள்ள வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக உணவகத்தில் இருந்தவர்கள் தவறுதலாக நினைத்துள்ளனர். அப்பெண் இஸ்லாமிய மதத்தை அவமதித்துவிட்டதாக விமர்சித்தனர்.

இது குறித்து அருகில் இருந்தவர்களுக்கு தெரியவர அந்த உணவகம் முன் 100க்கு மேற்பட்டோர் கும்பலாக திரண்டு அப்பெண்ணை மிரட்டினர். இதனால் அப்பெண் மிகுந்த அதிர்ச்சியும், பயமுமடைந்தார். 

இஸ்லாமிய மதத்தையும், மத புத்தகத்தையும் அப்பெண் அவமதித்துவிட்டதாகவும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமெனவும் அந்த கும்பல் கோஷம் எழுப்பியது.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அப்பெண்ணை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குர்ஆன் வசனம் இடம்பெற்ற ஆடையை தான் அணியவில்லை எனவும், ஆனாலும் நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் இதுபோன்று இனி நடக்காது என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.