ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்

0
133

சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் ($140) இலங்கை ரூபாயின் மதிப்பில் 45000 ரூபா உழைப்பதாக மலேசியாவின் ஆண் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அவரிடம் எஸ்யுவி ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது. பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டபோது இந்த உண்மை அம்பலமானது.

சோதனையின்போது சாம்பல்நிற ஆடையும் குல்லாவும் அணிந்த நிலையில் இவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். காகிதப் பை ஒன்றை வைத்திருந்த அவர், அவ்வழியாகச் செல்வோர் இரக்கப்படும் அளவுக்கு நடந்துகொண்டார்.

அதிகாரிகள் இவரை விசாரித்தபோது, அவர் எந்தப் பதிலையும் தரவில்லை. அவர் ஊமை மற்றும் செவிடாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்தனர்.

ஆனால், அடையாளப் பத்திரங்களை அதிகாரிகள் கேட்டபோது திடீரென்று அவர் பேசினார். பத்திரங்கள் தமது காரில் இருப்பதாக அவர் கூறினார்.

அது எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்த புரோட்டான் எக்ஸ் 70 ஆடம்பர கார் என்பதும் அப்போது தெரிய வந்தது. அந்த காரின் தற்போதைய விலை மலேசிய நாணயத்தில் 123,800 ரிங்கிட் முதல் 128,800 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பெயர் எதனையும் தெரிவிக்காத அந்த நபர் இரவுச் சந்தையில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிச்சை எடுத்து தினமும் 500 ரிங்கிட் வரை பெறுவதாகக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உடற்குறை காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சமூகநலத் துறையிடம் இருந்து மாதாமாதம் 450 ரிங்கிட் நிதி உதவியும் பெற்று வருகிறார். பிச்சை எடுக்க வேண்டாம் என வாய்மொழி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.