விவசாயிகள் போராட்டம்: ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்கள் சந்திப்பு

0
125

ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிகளை மறித்தும் டிராக்டர் அணிவகுப்புகளை முன்னெடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த நாடுகளின் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, பசுமை விதிமுறைகள், நியாயமற்ற போட்டித்தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் விவசாயிகள் நேற்றைய திகதி நாட்டின் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் ஐரோப்பிய தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் விவசாயிகளுடனான மூலோபாய கலந்துரையாடலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இதனிடையே ஜேர்மனியில் விவசாயத்திற்கான வரிச்சலுகைகளை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீரற்ற வானிலை, பறவைக் காய்ச்சல் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவீனம் உள்ளிட்டு விவசாயிகள் எதிகொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக இவ்வாறு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, பிரான்ஸ் விவசாயிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு சுங்க வரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனிய பொருட்களின் புழக்கம் அதிகரித்தது. இதனிடையே குறித்த நடவடிக்கையினை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதுப்பிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்களிடையே கலந்துரையாடையொன்று இடம்பெற்று வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.