லட்சத்தீவு சுற்றுலா செல்ல அனுமதி வாங்குவது எப்படி?

0
200

பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகும் மாலத்தீவு அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு பிறகும் கூகுள் தேடல்களிலும் சமூக வலைதளங்களிலும் லட்சத்தீவு தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

அந்த வகையில் லட்சத்தீவு இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. குளிர்கால விடுமுறைக்காக பலரும் பனிவிழும் மலைப் பிரதேசங்களுக்கும் கண்கவர் தீவுகளுக்கும் செல்ல திட்டமிடுவார்கள். இந்நிலையில் குளிர்கால விடுமுறைக்கு நீங்கள் லட்சத்தீவுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்றால் அது ஒரு நல்ல ஆப்ஷன் என்றும் கூறலாம்.

லட்சத்தீவு சுற்றுலா செல்ல அனுமதி வாங்குவது எப்படி? | How To Get Lakshadweep Tourist Permit

அமைதியான லட்சத்தீவு ஒவ்வொரு சுற்றுலா பயணிகளுக்கும் அழகிய கடற்கரைகளையும் இயற்கை அழகையும் நிச்சயம் வழங்கும் என்கின்றனர் அங்கு சென்ற பயணிகள். லட்சத்தீவின் அனைத்து தீவுகளிலும் மக்கள் வசிக்கவில்லை மற்றும் ஒரு சில பகுதிகள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்காக உள்ளது, அதுவும் சிறப்பு அனுமதியுடன்.

லட்சத்தீவின் உள்ளூர் மக்கள் அல்லாத எந்தவொரு இந்திய குடிமகனும், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட அனுமதியின்படி மட்டுமே அங்கு நுழையவோ அல்லது அங்கு சென்று வசிக்கவோ முடியும் என்பது குறிப்பிடதக்கது.

எனவே, அதற்கு ஆன்லைனிலும் நேரடியாகவும் எப்படி விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகள் என்ன என்பதை தொடர்ந்து காணலாம். லட்சத்தீவுக்குச் செல்ல அனுமதி பெற வேண்டும். அதற்கு பொதுவாக இரண்டு வழிகள் உள்ளன. ஆன்லைன் அனுமதி மற்றும் ஆஃப்லைன் அனுமதியாகும்.

ஆன்லைன் அனுமதி

ஆன்லைன் அனுமதியைப் பெற, நீங்கள் ePermit போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். இதை கிளிக் செய்யவும். (https://epermit.utl.gov.in/pages/signup). அதில் உங்களுக்கான கணக்கை உருவாக்கி சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். இதற்குப் பிறகு, நீங்கள் அதன் தீவு மற்றும் பயணத் தேதிகளைத் தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பயணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் அனுமதி கிடைக்கும்.   

ஆஃப்லைன் அனுமதி

அனுமதி பெறுவதற்கான மற்றொரு வழி விண்ணப்பப் படிவத்தை லட்சத்தீவு நிர்வாக இணையதளத்தில் (http://www.lakshadweeptourism.com/contact.html) ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்வது அல்லது லட்சத்தீவின் கவரட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். அதன் நகலை பெற்ற பிறகு அதை பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதி பெற தேவையான ஆவணங்களின் பட்டியல்

பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளின் நகல், விமான டிக்கெட் அல்லது கப்பல் போக்குவரத்து முன்பதிவு போன்று பயணச் சான்று, ஹோட்டல், ரிசார்ட் என தங்கும் இடத்தின் முன்பதிவு உறுதிப்படுத்துதல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 

கட்டணம் எவ்வளவு?

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயாகும். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மரபுரிமைக் கட்டணம் ரூ. 100 ஆகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாரம்பரிய கட்டணம் ரூ. 200 ஆகும்.