மறக்க முடியாத மின்னலே…; ஹாரிஸ் ஜெயராஜ் எனும் இசை அடையாளம்

0
177

மின்னலே திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி கடந்த 22 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எஸ்.எம். ஜெயகுமார் – ரேச்சல் ஜெயகுமார் தம்பதியினருக்கு ஜனவரி 8, 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

தனது மகன் ஹாரிஸ் ஜெயராஜை பெரிய பாடகராக ஆக்க வேண்டும் எனும் எண்ணம் அவரது தந்தை எஸ்.எம். ஜெயகுமாருக்கு இருந்தது. ஏனெனில் அவர் மலையாள இசையமைப்பாளர் ஷியாமிடம் கிடாரிஸ்ட் ஆகப் பணிபுரிந்தவர். இந்த இசைப் பாரம்பரியத்தின் காரணமாக ஹாரிஸ் ஜெயராஜ் தனது ஆறு வயது முதல் கர்நாடக சங்கீதம் படிக்க அனுப்பப்பட்டார்.

அதேபோல் 13 வயதுக்குள்ளாகவே லண்டனின் புகழ்பெற்ற டிரினிட்டி இசைக்கல்லூரியில் 8 கட்ட பரீட்சையை மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

தனது 12 வயது முதல் ஒரு பிராப்பர் இசையமைப்பாளராக வேண்டும் என்னும் நோக்கில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவின்கீழ் கிடார் கலைஞராக தனது பயிற்சியைத் தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், பல்வேறு மொழி இசையமைப்பாளர்களிடம் இசை புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார்.

1987ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ராஜ்-கோடி, சிற்பி, ஆதித்யன், ஷியாம், ஓசேப்பச்சன், வித்யாசாகர் எனப் பல இசையமைப்பாளர்களிடம் ஹாரிஸ் ஜெயராஜ் பணிபுரிந்து இருக்கிறார்.

அதேபோல் அக்காலகட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

அப்போது தான், நடிகர் விஜய் நடித்த கோகோ கோலா விளம்பரத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜை பற்றி பலரும் கோலிவுட் வட்டாரத்தில் பேசத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை அவரின் இசைப்பயணம் ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத ஒரு இடத்தினை பிடித்துள்ளது.