“சிங்களவர்களுக்கு கொண்டு கொடுங்கள்”: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

0
159

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நீண்ட காலமாக கோரி வரும் சர்வதேச பங்களிப்புடன் ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பதிலாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

2,500 நாட்களுக்கும் மேலாக வயிற்றுக்கு போதிய உணவின்றி வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மார்கள் இந்த ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றும் வேலையா என கேள்வி எழுப்பியுள்ளதோடு புதிய ஆணைக்குழுவை தென்னிலங்கைக்கு கொண்டு சென்று சிங்களவர்களுக்காக பணியாற்றுமாரு குறிப்பிட்டுள்ளனர்.

“இது தமிழர்களை ஏமாற்றும் வேலையா? வெளிநாடுகளை ஏமாற்றும் வேலையாகவா இதனை கொண்டு வந்துள்ளார்கள். ஆணைக்குழுக்களை கொண்டுவரும் நீங்கள் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை நீங்கள் செய்வதில்லை. உங்களுக்கு பிரயோசனமாக அமையும் வகையிலும் வேறு நாடுகளை ஏமாற்றும் வகையில் ஜெனீவாவை ஏமாற்றும் வகையில் ஆணைக்குழுக்களை திணிக்கின்றீர்களேத் தவிர அதில் எமக்கு எவ்வித பிரயோசனமாக விடயமும் இல்லை. இதனை ஏன் கொண்டு வருகிறீர்கள்? அந்த ஆணைக்குழுக்களை தெற்கில் அதனை பயன்படுத்துங்கள். உங்கள் சிங்கள மக்களுக்கு அதனை பயன்படுத்தினால் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.”

இதுவரை அரசாங்கம் கொண்டுவந்த ஆணைக்குழுவின் வாசலில் போய் தமிழ்த் தாய்மார்கள் நின்றிருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என வார இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி மானுவல் உதயசந்திர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“எத்தனையோ ஆணைக்குழுக்களை இவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். ஆணைக்குழுக்களின் வாசலிலேயே நாங்கள் போய் நின்று காலங்களை கடந்ததேத் தவிர எந்தவொரு ஆணைக்குழுவும் வந்து எங்களுக்கு எந்தவொரு நீதியையும் வழங்கவில்லை. இப்போதும் அதேபோல் தெற்கிலும், கிழக்கிலும் ஒரு ஆணைக்குழுவை கொண்டு வந்துள்ளார்கள் சமாதானம் எனக் கூறி ஒவ்வொரு அமைப்புக்களையும் அழைத்து கதைக்கின்றார்கள்.”

இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டமூலம் வெளிவிவகார அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய 2024 ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை 2,500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தாய்மார், பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஒரே குரலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கில் 2,500 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் முன்னணி உறுப்பினர்களின் தகவல்களுக்கு அமைய நீதி கிடைக்காமல் உயிரிழந்த பெற்றோரின் எண்ணிக்கை 210ற்கும் அதிகமாகும்.