‘தூஸ்ரா’ பந்துவீச்சு உத்திக்கு அவரே காரணம்: மனம் திறந்தார் முரளி

0
153

‘தூஸ்ரா’ பந்து வீசும் நுட்பத்தை தனக்கு கற்றுக் கொடுத்ததற்காக முன்னாள் பாகிஸ்தான் அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கை (Saqlain Mushtaq) முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள எஸ்.பி. கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின்போது தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையின் பல்வேறுபட்ட விடயங்களை இலங்‍கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்திய அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக்கை தான் பந்து வீசிய கடினமான பேட்டர் என்றும் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்ஸ் மீதான தனது அபிமானத்தையும் அவர் வெளிப்படுத்தியதுடன் தான் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடியது ஒரு சிறந்த அனுபவம் என்றார்.

ஓய்வு பெற்ற வலது கை சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சுமார் இரு தசாப்தங்களாக நீடித்த அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தினை கடந்த 2011 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டு வந்தார்.

1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரராகவும் உலக கிரிக்கெட்டில் இலங்கை அணியை ஒரு வலிமை மிக்க சக்தியாக நிலை நிறுத்தவும் முரளிதரன் முக்கிய பங்கு வகித்தார்.

இதுதவிர முன்னாள் ஐ.பி.எல். சாம்பியனான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் தற்போது அவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.